உத்தரகண்ட் மாநிலம் உதாம்சிங் நகர் மாவட்டத்தின் கதிமா பகுதியில், மகளின் திருமண நாளன்றே தந்தையின் பிணம் தூக்கப்பட்ட சோக சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்தின் போது மணமகன் தரப்பில் மணமகளுக்கு வழங்கப்படும் ‘மஹர்’ தொகை தொடர்பாக இருவீட்டாருக்கும் இடையே திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மகர் தொகை என்பது இஸ்லாமிய திருமணங்களில் ஒரு பெண்ணுக்கு வழங்கப்படும் கட்டாய பணம் அல்லது பரிசு பொருளாகும். இந்த பரிசை மணமகன் தரப்பிலிருந்து பணமாகவோ அல்லது மணமகள் விருப்பப்படி பரிசு பொருளாகவோ வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தத் தகராறு முற்றவே, மணமகளின் தந்தை கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி, சம்பவ இடத்திலேயே மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய திருமண வீடு, ஒரே கணத்தில் மரண ஓலமாக மாறியதுடன், மணமகன் தரப்பினரை பெண் வீட்டார் சிறைபிடித்ததால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.

இந்த விபரீத சம்பவத்தை அடுத்து, மணமகன் கண்ணீருடன் தனது தரப்பு நியாயத்தை ஊடகங்களிடம் உருக்கமாகப் பகிர்ந்துள்ளார்.”நாங்கள் எந்தத் தப்பும் செய்யவில்லை, முற்றிலும் நிரபராதிகள்; மஹர் தொகை தொடர்பாக இருதரப்பிலும் ஒருமித்த கருத்து எட்டப்பட்ட பிறகும், சிலர் திட்டமிட்டே இந்த விவாதத்தைப் பெரிதாக்கி வன்முறையாக மாற்றினர்” என்று அவர் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், மணமகனின் குடும்பத்தாரை மீட்டதுடன், உயிரிழந்த தந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணப் பந்தலில் அரங்கேறிய இந்தச் சோக விபரீதம் குறித்து போலீசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.