இந்திய ரயில்வேயில் ஏசி வகுப்புகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு வழங்கப்படும் பெட்ஷீட், தலையணை உறை, போர்வைகள் மற்றும் டவல்களின் தூய்மை குறித்து எப்போதும் பல்வேறு விவாதங்கள் எழுவதுண்டு. இந்நிலையில், ரயில்வே நிர்வாகம் இந்த படுக்கை விரிப்புகளை துவைப்பதற்கு எவ்வளவு செலவு செய்கிறது என்ற சுவாரசியமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ரயில்வேயின் கணக்குப்படி, ஒரு பயணிக்கான பெட்ஷீட்டைத் துவைப்பதற்கு வெறும் 4 முதல் 5 ரூபாய் மட்டுமே செலவிடப்படுகிறது. அதாவது, ஒட்டுமொத்தமாக ஒரு செட் படுக்கை விரிப்புகள், தலையணை உறை மற்றும் டவல் ஆகிய அனைத்தையும் சேர்த்து துவைத்து, அயர்ன் செய்து பயணிகளுக்கு வழங்குவதற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு வெறும் 10 முதல் 12 ரூபாய் மட்டுமே செலவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ரயில்வே துறை நாடு முழுவதும் அமைத்துள்ள அதிநவீன இயந்திரமயமாக்கப்பட்ட சலவையகங்கள் மூலமாகவே இந்தச் செலவு இவ்வளவு குறைவாக வைக்கப்படுகிறது. இந்த மெகா சலவையகங்களில் தினசரி லட்சக்கணக்கான ஆடைகள் குறைந்த செலவிலும், அதே நேரத்தில் தூய்மையாகவும், சுகாதாரமான முறையிலும் தானியங்கி இயந்திரங்கள் மூலம் துவைக்கப்படுகின்றன. பயணிகளின் டிக்கெட் கட்டணத்திலேயே இந்த பெட்ஷீட்களுக்கான கட்டணமும் மறைமுகமாகச் சேர்க்கப்பட்டிருந்தாலும், ரயில்வே நிர்வாகம் மிகக் குறைந்த செலவில் தரமான சேவையை வழங்க இந்த நவீன தொழில்நுட்பத்தையே நம்பியுள்ளது. இவ்வளவு குறைந்த செலவில் இத்தனை பெரிய அளவில் தூய்மைப் பணிகள் நடப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது
