மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டம் பராசியா பகுதியில் உள்ள தர்பாய் கிராமத்தில், திருநங்கைகளைப் போல வேடமணிந்து வந்து சுபநிகழ்ச்சிகளில் பணம் பறிக்க முயன்ற வாலிபர்கள் சிலரை பொதுமக்கள் கையும் களவுமாகப் பிடித்து தர்மஅடி கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இக்கிராமத்தில் நடைபெற்ற திருமண விழா ஒன்றிற்கு வந்த இந்த வாலிபர்கள், தாங்கள் திருநங்கைகள் என்று கூறி ‘நெக்’ (Neg) எனப்படும் பாரம்பரிய அன்புத்தொகையை பெரும் தொகையாக கேட்டு அடம் பிடித்துள்ளனர். இவர்களது அசாத்திய நடத்தையால் சந்தேகமடைந்த கிராம மக்கள், உடனடியாக உள்ளூர் திருநங்கை சமூகத்தினருக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர்.
அவர்கள் வந்து இவர்களது அடையாளத்தை சோதித்தபோது, அவர்கள் திருநங்கைகள் அல்ல, மாறாக வேடமிட்டு ஏமாற்ற வந்த வாலிபர்கள் என்பது அம்பலமானது.
https://x.com/PrimeNewsInd/status/2063607084386865525?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2063607084386865525%7Ctwgr%5E609f780ede8864323c7b130a4c5fcc42d4eec881%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.freepressjournal.in%2Fbhopal%2Fmen-dress-as-kinnars-at-a-wedding-demand-shagun-in-mps-chhindwara-exposed-thrashed-video-viral
இந்த ஏமாற்று வேலை வெளிச்சத்திற்கு வந்ததும் திருமண மண்டபமே ரணகளமானது. ஆத்திரமடைந்த அங்கிருந்த பெண்கள், அந்த வாலிபர்களை சரமாரியாக அடித்து வெளுத்ததோடு, அவர்கள் அணிந்திருந்த ஆடைகளையும் களைந்து அவர்களது முகமூடியைக் கிழித்தனர். இச்சம்பவத்தை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போன்களில் வீடியோவாகப் பதிவு செய்ய, அது தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
இந்த மாவட்டத்தில் இது போன்ற ஏமாற்று சம்பவங்கள் நடப்பது இது முதல் முறையல்ல என்றும், ஏற்கனவே பல சுபநிகழ்ச்சிகளில் இவர்கள் திருநங்கைகள் போல் நடித்து ஏமாற்றி பணம் பறித்துள்ளதாக உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து இதுவரை காவல்துறை தரப்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியிடப்படாத நிலையில், இது தொடர்பாக அடுத்தகட்ட விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
