சினிமாவில் இருந்து அரசியலில் தடம் பதித்து, தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், அரசியல் நுழைவுக்குப் பிறகு தமக்கு ஏற்பட்டுள்ள பயம் மற்றும் பாதுகாப்பற்ற உணர்வு குறித்து மனம் திறந்துள்ளார். அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், அரசியல்வாதியாக மாறிய பின் தனது ஆடைத் தேர்வுகள் மற்றும் தோற்றம் குறித்து மக்கள் என்ன நினைப்பார்கள் என்ற பயம் தனக்குள் எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “தற்போது கையில்லா ஆடைகளை அணியும்போது, மக்கள் என்னை இன்னும் ஒரு ‘ஹீரோயின்’ போலத்தான் பார்க்கிறார்களோ, ஒரு அரசியல்வாதிக்கான முதிர்ச்சியோடு பார்க்க மாட்டார்களோ என்ற சந்தேகம் எனக்குள் எழுகிறது” என்று கங்கனா தனது சுய சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அரசியல் களத்தில் மக்கள் தன்னை ஒரு தீவிரமான, பொறுப்புள்ள தலைவராகப் பார்க்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று கூறியுள்ள அவர், இதனாலேயே பொது மேடைகளிலும் நாடாளுமன்றத்திலும் தனது தோற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். சினிமாவில் சுதந்திரமாக வலம் வந்த தனக்கு, அரசியல்வாதியான பிறகு ஆடைகள் விஷயத்தில் ஏற்பட்டுள்ள இந்த தயக்கமும் பயமும் ஒரு புதுவிதமான அனுபவமாக இருப்பதாக கங்கனா ரணாவத் உருக்கமாகப் பகிர்ந்துள்ளார். இவரின் இந்த வெளிப்படையான பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.