மஹாராஷ்ட்டிரா மாநிலம்  சோரோச்சி என்ற கிராமத்தின் அருகே, சாக்கடை கால்வாயில் தலை நசுங்கிய நிலையில் தத்தாத்ரய பகவான் சாப்ரே (45) என்ற நபர் கடந்த மே 18 அன்று பிணமாக மீட்கப்பட்டார். காவல்துறையினருக்கு பெரும் சவாலாக இருந்த இந்த கொடூரக் கொலை வழக்கின் பின்னணியை, கடந்த 20 நாட்களாக தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார் தற்போது உண்மையை கண்டுபிடித்துள்ளனர்.

அதாவது இறந்த நபரின் பெயரில் இருந்த 30 லட்ச ரூபாய் எல்.ஐ.சி (LIC) ஆயுள் காப்பீட்டுப் பணத்தை தட்டிப்பறிப்பதற்காகவும், தனது சகோதரிக்கு அவர் கொடுத்து வந்த குடும்பத் தொல்லையை தீர்ப்பதற்காகவும், அவரது சொந்த மைத்துனரே (மனைவியின் சகோதரர்) 3 லட்ச ரூபாய் கூலி கொடுத்து இந்த கொலையை அரங்கேற்றியது அம்பலமாகியுள்ளது.

இக்கொலைச் சம்பவத்தின் முக்கிய புள்ளியான  மைத்துனர் ராமச்சந்திர தனாப்பா கிலாரே மற்றும் கூலி பெற்றுக்கொண்டு நேரில் கொலையைச் செய்த துக்காராம் மாருதி சாங்கோல்கர் ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கடந்த மே 17 அன்று தத்தாத்ரயவை கடத்திய கொலையாளிகள், மே 18 இரவு 11 மணியளவில் இரும்பு கம்பியால் அவரது தலை மற்றும் கழுத்துப் பகுதியில் கொடூரமாகத் தாக்கி கொலை செய்துள்ளனர்.

பின்னர், சாட்சியங்களை மறைப்பதற்காக சடலத்தை கால்வாயில் வீசிச் சென்றுள்ளனர். அப்பகுதியில் அடுத்தடுத்து நடந்த கொலைகளால் போலீசாருக்கு பெரும் அழுத்தம் ஏற்பட்ட நிலையில், தடய அறிவியல் அறிக்கை மற்றும் போன் கால் விவரங்கள் போன்ற தொழில்நுட்ப ஆதாரங்களை வைத்து இன்ஸ்பெக்டர் பிரவீன்குமார் காம்பளே தலைமையிலான தனிப்படை இந்த கொலை ரகசியத்தை வெற்றிகரமாக வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.