மும்பையைச் சேர்ந்த 52 வயது தொழிலதிபர் ஒருவர், திருமண ஆசையில் ஆன்லைன் மோசடியில் சிக்கி சுமார் 53.30 லட்ச ரூபாயை இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லாஜிஸ்டிக்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் தொழில் செய்து வரும் இவர், தனிமையில் இருந்ததால் டேட்டிங் செயலி மூலம் பெண் தேடி வந்துள்ளார்.

அப்போது ‘பிரியங்கா குப்தா’ என்ற பெயரில் அறிமுகமான பெண், தான் விவாகரத்து பெற்றவர் என்றும் தனது 6 வயது மகளுடன் வசித்து வருவதாகவும் கூறி தொழிலதிபருடன் நெருக்கமானார். மேலும் ஒரு கட்டத்தில் தொழிலதிபரைத் திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவித்த அந்தப் பெண், தனது பேச்சால் அவரை முழுமையாக நம்ப வைத்துள்ளார்.

மேலும் திருமண உறவில் நம்பிக்கையை ஏற்படுத்திய பிறகு, அந்தப் பெண் தொழிலதிபரை ‘கோல்ட் டிரேடிங்’ தொழிலில் முதலீடு செய்யத் தூண்டியுள்ளார். ‘மார்க்கெட் அக்சஸ்’ என்ற நிறுவனத்தில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் பெரும் லாபம் கிடைக்கும் என ஆசை காட்டியதால், அந்த நபர் தனது சேமிப்பிலிருந்து 53.30 லட்சம் ரூபாயை அந்தப் பெண் குறிப்பிட்ட கணக்கில் முதலீடு செய்துள்ளார்.

இந்நிலையில் கணக்கில் லாபத் தொகை ஒரு கோடி ரூபாய்க்கு மேல் காண்பிக்கப்பட்டாலும், பணத்தை எடுக்க முயன்றபோது அது முடியாமல் போனதோடு, அந்தப் பெண்ணும் தொடர்பைத் துண்டித்துள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தொழிலதிபர் தற்போது மும்பை காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.