உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவிற்கு பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு, நகரை அழகுபடுத்துவதற்காக சாலை ஓரங்களில் ஏராளமான பூந்தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால், பிரதமரின் நிகழ்ச்சி முடிந்து அவர் புறப்பட்ட சில நேரங்களிலேயே, அந்தப் பூந்தொட்டிகளை பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு திருடிச் சென்ற அதிர்ச்சி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

மேலும் “சர்க்காரி மால் ஹை, லூட் லோ” (இது அரசாங்கப் பொருள், கொள்ளையடியுங்கள்) என்ற மனப்பான்மையுடன், மக்கள் தங்களின் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் இந்தத் தொட்டிகளை ஏற்றிச் சென்றது பார்ப்போரை முகம் சுளிக்க வைத்துள்ளது.

“>

பொதுச் சொத்துக்களைப் பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்ற அடிப்படை உணர்வு கூட இல்லாமல், பட்டப்பகலில் அரங்கேறிய இந்தத் திருட்டுச் சம்பவம் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. நகரின் அழகிற்காக அரசு மேற்கொண்ட முயற்சிகளைச் சீர்குலைக்கும் வகையில் செயல்பட்ட இத்தகைய நபர்களின் செயல், சமூக ஒழுக்கத்தின் வீழ்ச்சியையே காட்டுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருவதோடு, பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்துபவர்கள் மற்றும் திருடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.