சமூகக் கருத்துக்களையோ அல்லது ஒழுக்கநெறிகளையோ அடிப்படையாகக் கொண்டு நீதிமன்றங்கள் செயல்பட முடியாது என்றும், சட்டத்தின் வரையறையே இறுதியானது என்றும் அலகாபாத் உயர் நீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

அதாவது திருமணமான ஒரு ஆண், தனது மனைவியைப் பிரிந்து வேறொரு பெண்ணுடன் விருப்பத்தின் அடிப்படையில் ‘லிவ்-இன்’ முறையில் வாழ்ந்து வந்துள்ளார். இதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கினை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த  கருத்தை முன்வைத்துள்ளது.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டதாவது, “சட்டம் என்பது வேறு, சமூக ஒழுக்கம் என்பது வேறு. ஒரு சமூகம் எதை ஒழுக்கம் என்று கருதுகிறதோ, அதன் அடிப்படையில் நீதிமன்றங்கள் ஒரு முடிவுக்கு வர முடியாது. சட்டத்தின்படி எது குற்றமோ, அதை மட்டுமே நீதிமன்றம் தண்டிக்க முடியும். திருமணமான ஒரு நபர், மற்றொரு நபருடன் அவரது முழுச் சம்மதத்துடன் இணைந்து வாழ்வதை சட்டரீதியாகக் குற்றமாகக் கருத முடியாது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள தனிநபர் சுதந்திரத்தின் அடிப்படையில், வயது வந்த இருவர் தங்களுக்குப் பிடித்தமான முறையில் இணைந்து வாழ்வதை சட்டத்தால் தடுக்க இயலாது.
சமூகக் கண்ணோட்டத்தில் இது தவறாகப் பார்க்கப்பட்டாலும், சட்டரீதியாகப் பார்க்கும் போது இரு நபர்களின் தனிப்பட்ட விருப்பமே முதன்மையானது என நீதிபதிகள் தெளிவுபடுத்தினர். சமூகத்தின் ஒழுக்க விதிகள் காலத்திற்கு ஏற்ப மாறலாம், ஆனால் நீதிமன்றம் அரசியலமைப்புச் சட்டத்தின் படியே இயங்க வேண்டும் என்பதை இந்தத் தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் இந்தத் தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தனிநபர் உரிமைகளுக்கும் சமூகக் கட்டுப்பாடுகளுக்கும் இடையிலான மெல்லிய கோட்டை இந்தத் தீர்ப்பு அழுத்தமாகச் சுட்டிக்காட்டியுள்ளது.