பெங்களூரில் காவல் நிலைய ஆய்வாளர் பாப்பண்ணா மீது, யசஷ்வினி என்ற பெண் ரவுடி பரபரப்பான புகாரை அளித்துள்ளார். ஆய்வாளர் தனக்கு வாட்ஸ்-அப்பில் ஆபாசமான குறுந்தகவல்களை அனுப்புவதாகவும், செல்போனில் அழைத்து முத்தம் கேட்டு தொல்லை கொடுப்பதாகவும் அவர் கமிஷனர் சீமந்த்குமார் சிங்கிடம் தெரிவித்துள்ளார்.
தன்னை ‘பாப்பு’ என்று செல்லமாக அழைக்கச் சொல்லி வற்புறுத்தியதுடன், இது குறித்து வெளியில் சொன்னால் கூலிப்படையை ஏவி கொலை செய்துவிடுவேன் என்று ஆய்வாளர் மிரட்டியதாகவும் யசஷ்வினி அந்தப் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.இந்த புகாருடன் ஆதாரமாக ஆடியோ மற்றும் புகைப்படங்களையும் அவர் சமர்ப்பித்துள்ளார்.
அந்த ஆடியோவில் ஆய்வாளர் பாப்பண்ணா அந்தப் பெண்ணிடம் மிகவும் நெருக்கமாகவும், ஆபாசமாகவும் பேசும் உரையாடல்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை இந்த விவகாரத்தில் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றாலும், புகாரை ஆய்வு செய்து ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு பெண் ரவுடியே காவல் ஆய்வாளர் மீது இத்தகைய புகாரை அளித்திருப்பது பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
