மும்பையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது மாத வருமானம் குறித்து வெளியிட்ட தகவல் தற்போது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது. இன்ஸ்டாகிராம் பயனர் உட்கர்ஷ் வர்மா பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், மும்பையில் ஆட்டோ ஓட்டினால் சராசரியாக ஒரு நாளைக்கு 2,500 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும் என்றும், அதன் மூலம் மாதத்திற்கு சுமார் 75,000 ரூபாய் வருமானம் கிடைப்பதாகவும் அந்த ஓட்டுநர் தெம்பாகக் கூறுகிறார்.
இன்னும் கொஞ்சம் கஷ்டப்பட்டு உழைத்தால் மாதம் 1 லட்சம் ரூபாய் வரை கூட கல்லா கட்டலாம் என்றும், சுமாரான நாட்களில் கூட 60,000 ரூபாய்க்கு மேல் கையில் நிற்கும் என்றும் அவர் விவரிப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
View this post on Instagram
பி.டெக் (B.Tech) முடித்துவிட்டு ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் சேர்ந்தபோது கிடைத்த முதல் சம்பளத்தை விட இது அதிகம் என அந்த வீடியோவை பகிர்ந்த இளைஞரே வியந்து போயுள்ளார்.
இந்தியாவில் 30,000 ரூபாய் கிடைக்கும் ஐடி வேலையை கௌரவமாகப் பார்க்கும் சமூகம், கடினமாக உழைத்து 75,000 ரூபாய் சம்பாதிக்கும் ஆட்டோ ஓட்டுநரை மதிக்கத் தவறுவது ஏன்? என்கிற கேள்வியையும் இந்த வீடியோ எழுப்பியுள்ளது.
இருப்பினும், இந்த வருமானத்திற்குப் பின்னால் அந்த ஓட்டுநரின் நீண்ட நேர உழைப்பும், ஓய்வில்லாத ஓட்டமும் ஒளிந்திருப்பதாக ஒரு தரப்பினர் கமெண்ட் செய்து வருகின்றனர்.
