மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே உள்ள கெஞ்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சங்கிலி முருகன், டி.குன்னத்தூரில் கிராம தலையாரியாக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி சோனியா (34) செங்குளம் பகுதியில் தலையாரியாகப் பணியாற்றினார். இருவருக்கும் திருமணம் நடந்து மூன்று ஆண்டுகள் கடந்துள்ளது.

இதில் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுவந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, சங்கிலி முருகன் தனது தங்கையின் வீட்டில் தங்கி வந்தார். சோனியா அவரை வீட்டுக்கு வருமாறு பலமுறை அழைத்தும், சங்கிலி முருகன் மறுத்ததாக தெரிய வருகிறது.

இதையடுத்து, கடந்த 19-ம் தேதி, சோனியா தனது கணவர் பணியாற்றும் டி.குன்னத்தூர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று நேரில் சந்தித்து மீண்டும் வீட்டுக்கு வருமாறு கேட்டுள்ளார். ஆனால், அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த சோனியா, தான்  கொண்டு சென்ற பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். சம்பவத்தை பார்த்த அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக தீயை அணைத்து, அவரை ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி நேற்று சோனியா உயிரிழந்தார். மேலும் இது தொடர்பாக டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.