திருமணம் செய்வதாகப் பொய் வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், திருமணத்திற்கு முந்தைய உடலுறவு மற்றும் அதன் விளைவுகள் குறித்து உச்சநீதிமன்றம் சில முக்கியக் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளது.

திருமணம் செய்வதாகக் கூறி தன்னை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட நபர் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது நீதிபதி பி.வி. நாகரத்னா தெரிவித்ததாவது: “திருமணத்திற்கு முன்பு ஒரு ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் முற்றிலும் அந்நியர்களே. அவர்களது உறவு எவ்வளவு நெருக்கமானதாக இருந்தாலும், திருமணத்திற்கு முன்பே அவர்கள் எப்படி உடலுறவில் ஈடுபடுகிறார்கள் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஒருவேளை நாங்கள் பழமைவாதிகளாகத் தோன்றலாம், ஆனால் பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். திருமணத்திற்கு முன் யாரையும் முழுமையாக நம்பிவிடக் கூடாது. அத்தகைய உறவில் ஈடுபடுவதற்கு முன் அதன் விளைவுகளைச் சிந்திப்பது மிக அவசியம் என்றார்.

இந்த வழக்கை ஆய்வு செய்த நீதிபதிகள், புகாரளித்த பெண் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர் ஆகிய இருவருக்கும் இடையே நிலவிய உறவு, ‘சம்மதத்துடன் கூடிய உறவாக’  தெரிவதாகக் குறிப்பிட்டனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய இழப்பீடு வழங்கி இந்த வழக்கை சுமுகமாக முடிக்க முடியுமா என்பது குறித்து இரு தரப்பினரும் ஆராய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் புதன்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.