கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி விடுதியின் 3-ஆவது மாடியில் இருந்து குதித்து பத்தாம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் மீது அலட்சியம் காட்டியதாகப் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதாவது சித்ரதுர்காவில் உள்ள டி.வி.எஸ் (DVS) குடியிருப்புப் பள்ளியில் கோத்ரேஷ் என்ற மாணவன் 10-ஆம் வகுப்பு பயின்று வந்தான். திங்கட்கிழமை காலை சுமார் 7:15 மணியளவில், அந்த மாணவன் தான் தங்கியிருந்த விடுதி கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார்.

விடுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளை ஆய்வு செய்ததில்: மாணவன் மாடியின் கைப்பிடி சுவருக்கு அருகில் சிறிது நேரம் நின்று கொண்டிருப்பது தெரிந்தது. நீண்ட நேரம் வராண்டாவில் முன்னும் பின்னும் நடந்து கொண்டிருந்த அந்த மாணவன், மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகத் தெரிகிறது. சில நிமிடங்களுக்குப் பிறகு அவர் திடீரென கீழே குதித்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து மாணவனின் தந்தை போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: எனது மகனுக்கும் சக மாணவன் ஒருவனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த மாணவன் கோத்ரேஷை செருப்பால் அடித்ததுடன், இரும்பு கம்பியால் தாக்க முயன்றுள்ளார். மேலும், விடுதி வார்டன் மற்றும் தலைமை ஆசிரியர் ஆகியோர் எனது மகனுக்குத் தேவையற்ற மன அழுத்தத்தைக் கொடுத்துள்ளனர் என்றார்.

தந்தையின் புகாரை அடுத்து, பள்ளி நிர்வாகம், தலைமை ஆசிரியர், விடுதி வார்டன் மற்றும் ஒரு சக மாணவன் மீது அலட்சியம் காட்டியதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மாணவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் மாணவனின் தற்கொலைக்கான உண்மையான காரணம் என்ன? சக மாணவனின் தாக்குதல் காரணமா அல்லது பள்ளி நிர்வாகத்தின் நெருக்கடியா? என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.