பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 21 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற அமெரிக்கா – ஈரான் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதிப் பேச்சுவார்த்தைகள் எந்தவித உடன்பாடும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்துள்ளன.

இந்தத் தோல்வியைத் தொடர்ந்து, மேற்கு ஆசியாவில் மீண்டும் போர்ப் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதுடன், உலக நாடுகளின் கவனம் தற்போது ‘ஹோர்முஸ் ஜலசந்தி’ (Strait of Hormuz) மீது திரும்பியுள்ளது. ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த முட்டுக்கட்டையால்தான் பேச்சுவார்த்தை முறிந்ததாகக் கூறப்படும் நிலையில், ஈரானை முழுமையாக முடக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறக்கத் தவறினால், ஈரானின் கடற்படை மற்றும் எண்ணெய் விநியோகக் கட்டமைப்புகள் முற்றிலுமாக அழிக்கப்படும் என டிரம்ப் கூறியிருப்பது உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

மறுபுறம், அமெரிக்காவின் மிரட்டலுக்கு அஞ்சப்போவதில்லை எனத் தெரிவித்துள்ள ஈரான், ஹோர்முஸ் ஜலசந்தியைத் தனது ‘அணு ஆயுதமாக’ மாற்றி அமெரிக்காவிற்குப் பதிலடி கொடுத்து வருகிறது.

அமெரிக்கப் போர்க்கப்பல்கள் ஹோர்முஸ் பகுதிக்குள் நுழைந்தால் அவை தரைமட்டமாக்கப்படும் என்றும், இந்தப் போர் மேகத்தின் வெப்பத்தைத் தாள முடியாமல் வல்லரசுகளே நிலைகுலையும் என்றும் ஈரான் ராணுவம் எச்சரித்துள்ளது. அமெரிக்கா ஈரானின் ‘கார்க் தீவை’ (Kharg Island) முற்றுகையிட்டு எண்ணெய் ஏற்றுமதியைத் தடுக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக எந்தவொரு கப்பலும் செல்வதைத் தடுப்போம் என ஈரான் பதிலடி கொடுத்துள்ளது.

வல்லரசு நாடுகளுக்கிடையிலான இந்த மோதல் ஒரு பிராந்தியப் போராக வெடித்தால், உலகப் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்திக்கும் என்பதால் சர்வதேச நாடுகள் ஆழ்ந்த கவலையில் உள்ளன.