பாகிஸ்தானில் நடைபெற்ற ஈரான் – அமெரிக்கா இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவுக்கு எதிராகப் புதிய பொருளாதாரப் போர் மிரட்டலை விடுத்துள்ளார்.
ஈரானுக்கு விமான எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை சீனா விநியோகம் செய்வதாகத் தனக்குத் தகவல் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள டிரம்ப், அவ்வாறு ஈரானுக்கு ராணுவ உதவி வழங்கும் நாடுகள் மீது அதிரடியாக 50% சுங்க வரி (Tariff) விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
“சீனாவுடன் எனக்கு நல்ல உறவு இருந்தாலும், அவர்கள் ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்கினால் கடுமையான அபராதத்தைச் சந்திக்க நேரிடும்; இது ஒரு மிகப்பெரிய தொகையாக இருக்கும்” என டிரம்ப் கூறியிருப்பது சர்வதேச வர்த்தகச் சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே சீனா மீதான வரிகள் தொடர்பாக அமெரிக்க நீதிமன்றங்களுடன் சட்டப் போராட்டம் நடத்தி வரும் டிரம்ப், தற்போது ஈரானை இருளில் மூழ்கடிக்கப் போவதாகவும், அதன் மின்சாரக் கட்டமைப்பை முற்றிலுமாக சிதைக்கப் போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.
ஈரானுக்கு ஆயுதங்களை அனுப்ப வேண்டாம் என எச்சரிக்கும் அதே வேளையில், சீனாவுக்கான கச்சா எண்ணெய் தேவையை ஈடுகட்ட அமெரிக்கா மற்றும் வெனிசுலாவில் இருந்து எண்ணெய் வழங்கத் தயாராக இருப்பதாகவும் டிரம்ப் ஒரு “ஆஃபரை” முன்வைத்துள்ளார்.
பிப்ரவரி 2026-ல் 125 சதவீதமாக இருந்த சீனா மீதான வரிகள் தற்போது 10-15 சதவீதமாக உள்ள நிலையில், மீண்டும் 50 சதவீத வரியை டிரம்ப் கையில் எடுத்துள்ளது பெய்ஜிங் நிர்வாகத்தை அதிருப்தி அடையச் செய்துள்ளது. அடுத்த மாதம் அதிபர் ஷி ஜின்பிங்கைச் சந்திக்க டிரம்ப் சீனா செல்லவிருக்கும் நிலையில், அதற்கு முன்னதாக விடுக்கப்பட்டுள்ள இந்த அச்சுறுத்தல் ஆசியப் பிராந்தியத்தில் புதிய ராஜதந்திரப் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
ஈரான் மீதான ஹோர்முஸ் ஜலசந்தி முற்றுகை ஒருபுறம் தீவிரமடைந்து வரும் நிலையில், டிரம்பின் இந்த “டேரிஃப்” அஸ்திரமானது சீனா மற்றும் ஈரான் இடையிலான வர்த்தக உறவை முறிக்க அமெரிக்கா எடுக்கும் இறுதி முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
