கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் குண்டறா பகுதியைச் சேர்ந்த அகிலா (வயது 35), 2 பிள்ளைகளின் தாயும் திருமணமானவரும் ஆவார். ஆனால், அவர் எர்ணாகுளம் மாவட்டம் நேரியமங்கலத்தைச் சேர்ந்த பினு (வயது 38) என்ற இளைஞருடன் புது உறவில் ஈடுபட்டிருந்தார். இந்த இருவரும் ஆலுவா பகுதியில் உள்ள ஒரு விடுதியில் அடிக்கடி சந்தித்து வந்தனர்.

சமீபத்தில் அவ்விதமாக இருவரும் விடுதியில் தங்கிய போது, அகிலா பினுவிடம் “நீ என்னை திருமணம் செய்தாகவேண்டும்” என வற்புறுத்தினார். ஆனால், பினு மறுத்து, “இந்த உறவு இப்படி  போகட்டும்” என பதிலளித்ததாக கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கோபம் தலைக்கேறிய பினு, அகிலா அணிந்திருந்த துப்பட்டாவால் அவரது கழுத்தை இறுக்கி கொன்று விட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்த பிறகு, எந்த ஒரு பதற்றமும் இல்லாமல், பினு தனது நண்பர்களுக்கு வீடியோ காலில் உடலையும் கொலை செய்த சம்பவத்தையும் காட்டியிருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த நண்பர்கள் அதிர்ச்சியில் ஆலுவா காவல்துறையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பந்தப்பட்ட விடுதிக்கு விரைந்த போலீசார், அகிலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், பினுவை கைது செய்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதலுக்காக தாய் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கேரளாவை அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது .