நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க. தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டுப் பெருவெற்றி பெற்றார். இதில், தனது திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை அவர் சமீபத்தில் ராஜினாமா செய்தார். த.வெ.க. தனித்து ஆட்சி அமைக்கப் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், காங்கிரஸ், கம்யூனிஸ்டு மற்றும் வி.சி.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு தமிழகத்தில் புதிய ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காலியாக உள்ள திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்பி அதிரடி விளக்கம் அளித்துள்ளார்.

இது பற்றி அவர் கூறியதாவது திருச்சி கிழக்கு தொகுதி உட்பட வரவிருக்கும் எந்தவொரு இடைத்தேர்தலிலும் நான் போட்டியிடப் போவதில்லை. இந்த முடிவை முதல்-அமைச்சர் விஜய்யிடமே நான் ஏற்கனவே மிகத் தெளிவாகக் கூறிவிட்டேன். புதிய அமைச்சரவையில் நான் இடம் பெற வேண்டும் என த.வெ.க. தரப்பில் அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டது உண்மைதான். ஆனால், எனக்கு அமைச்சர் ஆக வேண்டும் என்ற எந்தவொரு ஆசையும் தனிப்பட்ட முறையில் இல்லை. எனவே, 100 சதவீதம் நான் எந்த இடைத்தேர்தலிலும் களம் இறங்கப்போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மேலும், த.வெ.க. தலைமையிலான புதிய அமைச்சரவையில் வி.சி.க. ஏன் பங்குபெற்றது என்பது குறித்தும் அவர் வெளிப்படையாகப் பேசினார். “புதிய அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பங்கு பெற்றால் மட்டும்தான் இந்த ஆட்சிக்கு முழுமையான பாதுகாப்பு இருக்கும் என த.வெ.க. தலைமை கருதியது. அவர்களின் அந்த எண்ணத்திற்கும், கூட்டணி தர்மத்திற்கும் மதிப்பளித்தே நாங்கள் அமைச்சரவையில் பங்கு பெற்றோம்” என்று திருமாவளவன் கூறினார். அமைச்சரவை பங்கீட்டிற்குப் பின் இடைத்தேர்தல் குறித்து வி.சி.க. தலைவர் வெளியிட்டுள்ள இந்த அதிரடி அறிக்கை தமிழக அரசியலில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.