அரசியல் வட்டாரத்தில் தன் மீது வைக்கப்படும் தொடர் விமர்சனங்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்பி மிகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் திட்டமிட்ட அவதூறுகள் என்று சாடினார். “என் மீது பழி சுமத்தி, என்னை விமர்சனம் செய்பவர்கள்தான் தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்; நான் எதற்கும் தடுமாறவில்லை, எனது பாதையில் மிகத் தெளிவாகவே இருக்கிறேன்” என்று திருமாவளவன் அதிரடியாகக் குறிப்பிட்டுள்ளார்.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே கட்சி நிர்வாகி ஆதவ் அர்ஜூனாவுடன் இணைந்து, கூட்டணிக்கு எதிராகத் தான் ஏதோ சதித்திட்டம் தீட்டியதாகச் சிலர் பரப்பி வரும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்று அவர் மறுத்துள்ளார். “அரசியலில் எப்போது எந்த முடிவை எடுக்க வேண்டும், எந்த நேரத்தில் எப்படிச் செயல்பட வேண்டும் என்ற வித்தை, கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு அரசியல் கட்சியை வெற்றிகரமாக வழிநடத்தி வரும் எனக்கு நன்றாகவே தெரியும். எனக்கு யாரும் அரசியல் பாடம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று விமர்சகர்களுக்கு அவர் கறாராகப் பதிலளித்துள்ளார்.

 

மேலும், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் தான் போட்டியிடாததற்கான உண்மையான பின்னணி குறித்தும் அவர் விவரித்தார். “கூட்டணி அமைப்பதும், அதனைத் தொய்வின்றித் தொடர்வதும் சாதாரண விஷயமல்ல. நமது கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கருத்துகளுக்கும், அவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டியது ஒரு தலைவராக எனது கடமை. அவர்களின் எண்ணங்களை மனதில் கொண்டுதான், நான் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட வேண்டாம் என்ற முடிவை எடுத்தேன் என்று கூட்டணி தர்மம் குறித்து திருமாவளவன் விளக்கியுள்ளார்.