2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி விலகுவதாக அதன் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக தங்களுக்கு ஒரே ஒரு தொகுதியை மட்டுமே ஒதுக்க முன்வந்ததாகவும், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையின் போது தங்களைச் சிறுமைப்படுத்தும் வகையில் ‘பெரிய அண்ணன்’ தோரணையில் திமுக நடந்துகொண்டதாகவும் வேல்முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் சமூக நீதி உள்ளிட்ட மக்களின் கோரிக்கைகளை திமுக அரசு கண்டுகொள்ளவில்லை என்றும், இதனால் கூட்டணியில் நீடிக்க விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், பாஜக அல்லது தவெக போன்ற கட்சிகளுடன் தவாக கூட்டணி வைக்காது என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த அதிரடி முடிவுக்குப் பதில் அளித்துள்ள திமுக தரப்பு, இந்தக் கூட்டணியில் இன்னும் முறிவு ஏற்படவில்லை என்பதைப் போலப் பேசி வருகிறது. திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் இது குறித்துக் கூறுகையில், தவாக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தங்களுக்கு இன்னும் அதிகாரப்பூர்வமாகவோ அல்லது முறைப்படியோ எந்தத் தகவலும் வரவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வேல்முருகன் பேச்சுவார்த்தைக்கு வரத் தயார் என்று சொல்லியிருப்பதாகவே தங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும், விரைவில் அவரும் தொகுதிப் பங்கீட்டுக் குழுவினால் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படுவார் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த முரண்பட்ட தகவல்களால் திமுக – தவாக இடையிலான கூட்டணி உறவு தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
