புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் நேற்று (மார்ச் 22) தனது 30 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று யாரும் எதிர்பாராத விதமாக ‘நேயம் மக்கள் கழகம்’ என்ற கட்சியுடன் தவெக தனது முதல் கூட்டணியை அதிகாரப்பூர்வமாக அமைத்துள்ளது.
இந்தத் திடீர் திருப்பத்தால், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டு, உருளையன்பேட்டை மற்றும் தட்டாஞ்சாவடி ஆகிய இரண்டு தொகுதிகள் நேயம் மக்கள் கழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு, முதன்முறையாக ஒரு கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும்.
இதனால் புதுச்சேரி தேர்தல் களம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக-வின் இந்த அதிரடி கூட்டணி முடிவு, மற்ற பெரிய கட்சிகளுக்குப் பெரும் சவாலாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. வேட்பாளர்கள் அறிவிப்பு வெளியான மறுநாளே இந்தத் திடீர் மாற்றம் நிகழ்ந்திருப்பது புதுச்சேரி அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது.
