தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தமிழக அரசியலில் ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்ற முழக்கமே 2026 சட்டமன்றத் தேர்தலைத் தீர்மானிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது ஆளும் கட்சியோ அல்லது ஆண்ட கட்சியோ தனித்து 40 சதவீத வாக்குகளைப் பெறும் நிலையில் இல்லை என்றும், கூட்டணிக் கட்சிகளின் பலத்தை வைத்தே தி.மு.க போன்ற கட்சிகள் வெற்றி பெற்று வருவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளின் பங்களிப்பை ஒப்புக்கொண்ட தி.மு.க, சட்டமன்றத் தேர்தலில் மட்டும் அவர்களுக்கு உரிய அதிகாரப் பகிர்வை வழங்க மறுப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கூட்டணிக் கட்சிகளைத் தேவைக்கு மட்டும் பயன்படுத்திவிட்டுப் பின்னர் ஒதுக்கித் தள்ளும் ‘பண்ணையார் மனநிலை’ இனி தமிழகத்தில் செல்லுபடியாகாது என்று ஆதவ் அர்ஜுனா சாடியுள்ளார்.

ஒடுக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய சமூகத் தலைவர்கள் அதிகாரத்திற்கு வரும் காலம் கனிந்துள்ளதாகவும், அதிகாரப் பகிர்வு என்பது அனைத்துக் கட்சிகளின் உரிமைக் குரலாக மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நியாயமான கேள்விகளை எழுப்புபவர்களைப் பா.ஜ.க அல்லது ஆர்.எஸ்.எஸ் என்று முத்திரை குத்தி தி.மு.க இனி தப்பிக்க முடியாது என்றும், சிறுபான்மையினரின் காவலன் என்ற தி.மு.க-வின் முகமூடி இனி கிழிந்துவிடும் என்றும் அவர் தனது எக்ஸ் பதிவில் மிகக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.