தி.மு.க. சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17-ஆம் தேதி அண்ணா பிறந்த நாள், பெரியார் பிறந்த நாள், மற்றும் தி.மு.க. தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து “முப்பெரும் விழா” எனும் பெயரில் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த விழா, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்படும் ஒரு பாரம்பரிய நிகழ்வாக திகழ்கிறது.

அந்தவகையில், இந்த ஆண்டு நடைபெறும் முப்பெரும் விழா கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த கரூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. இவ்விழா குறித்து தி.மு.க. தலைமையகம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, இன்று (புதன்கிழமை), மாலை 5 மணிக்கு, கரூர்-திருச்சி சாலையில் அமைந்துள்ள கோடங்கிபட்டி அருகே முப்பெரும் விழா நடைபெற உள்ளது.

 

இந்த விழாவில், தி.மு.க. தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு, கட்சிப் பணிகளில் சிறப்பாக ஈடுபட்ட மூத்த முன்னோடிகளுக்கு விருதுகள் வழங்கி சிறப்புரையாற்ற உள்ளார். விழாவில், பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர் பாரதிதாசன், பேராசிரியர், மு.க. ஸ்டாலின் விருதுகள் என ஒட்டுமொத்தமாக ஆறு விருதுகள் வழங்கப்படவுள்ளன.

இந்நிலையில், முப்பெரும் விழா தொடங்க இருப்பதை முன்னிட்டு, திமுகவின் சார்பில் விழாவை முன்னெடுக்கும் விதமாக ஒரு பாடலும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தற்போது கரூரில் முப்பெரும் விழா தொடங்கியுள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் வருகை புரிந்துள்ளார். இந்த நிலையில் திமுக வெளியிட்டுள்ள முப்பெரும் விழா பாடல் கட்சி நிர்வாகிகள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.