திருச்சி மற்றும் அரியலூரில் கடந்த சனிக்கிழமை நடிகரும் தவெக தலைவருமான விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். அவரை நேரில் காண, ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். திருச்சி விமான நிலையம் முதல் மரக்கடை வரை, மக்கள் கூட்டம் அலைமோதியது. விஜயின் பிரசாரத்துக்கு கிடைத்த பெரும் வரவேற்பும், கூட்ட நெரிசலும் தற்போதைய தமிழக அரசியல் பரப்புரையில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ஆனால், இந்த கூட்டம் ஓட்டாக மாறுமா? அல்லது சினிமா பிரபலம் என்பதாலேயே ரசிகர்கள் கூடுகிறார்களா? என்ற விவாதம் தீவிரமடைந்துள்ளது.
இந்த சூழலில், பாஜக மாநில நிர்வாகியுமான நடிகர் சரத்குமார், விஜயை விமர்சித்துள்ளார். இது பற்றரி அவர் கூறியதாவது, “1996-ல் நாட்டாமை, சூர்யவம்சம் போன்ற வெற்றிப் படங்களை கொடுத்த பிறகுதான் அரசியலுக்கு வந்தேன். நான் ஓய்வுக்கு பிறகு அரசியலுக்கு வரவில்லை.
மதுரையிலும் எனக்கே மாபெரும் கூட்டம் கூடியது. அந்த காணொளிக் காட்சிகளை வேண்டுமானால் காட்டுகிறேன். கூட்டம் எல்லோருக்கும் வரும். ஆனால், விஜய்க்கு கொள்கையும் கோட்பாடும் இல்லை. எதிர்ப்பு அரசியலையே தற்போது செய்து வருகிறார்!” என கடுமையாக விமர்சித்துள்ளார்.
