இளைஞர்கள் மற்றும் மகளிர் தங்கள் பக்கம் இருப்பதாகச் சில கட்சிகள் சினிமா மோகத்தை வைத்துப் பொய்ப் பிரச்சாரம் செய்து வருவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் சாடியுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கோவி. செழியன் கூறியதாவது, தமிழகத்தில் தற்போது நமக்கு எதிராகச் செயல்படும் மாறுபட்ட கொள்கையுடைய எதிர்க்கட்சிகள், திட்டமிட்டுப் பொய்ப் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விட்டு வருகின்றன. குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் மகளிர் தங்கள் பக்கம் ஈர்க்கப்பட்டுள்ளதாக ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.

சினிமா மோகத்தைக் காட்டி, இளைஞர்களும் மகளிரும் தங்கள் பின்னால் இருப்பதாக அவர்கள் கூறுவது முற்றிலும் பொய்யானது. மக்களை ஏமாற்றும் நோக்கில் இத்தகைய பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. திமுக அரசு மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறது. இதனைச் சகித்துக் கொள்ள முடியாதவர்களே இது போன்ற தேவையற்ற கருத்துகளைப் பரப்பி வருகின்றனர் என்று கூறியுள்ளார்.