ஊழலைப் பற்றிப் பேசும் நடிகர் விஜய், தான் வாங்கும் ஊதியத்தை வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா என்று தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அவரது கட்சி குறித்து முன்வைத்த விமர்சனங்கள் வருமாறு,
ஊழல் குறித்து மேடைகளில் வீரவசனம் பேசும் நடிகர் விஜய், தனது திரைப்படங்களுக்குப் பெறும் உண்மையான ஊதியத்தை மக்களிடம் வெளிப்படையாக அறிவிப்பாரா? தனது வருமானத்தை மறைத்த காரணத்திற்காக ஏற்கெனவே அபராதம் கட்டியவர் அவர். இத்தகைய சூழலில், ஊழல் குறித்துப் பேசுவதற்கு அவருக்கு எந்தத் தார்மீகத் தகுதியும் இல்லை.
விஜய்யைச் சுற்றி இருப்பவர்கள் யார் என்பதை மக்கள் பார்க்க வேண்டும். தவறு செய்தவர்கள் அனைவரும் இப்போது விஜய்யுடன் கைகோர்த்துள்ளனர். இத்தகைய நபர்கள் நாட்டை ஆளும் பொறுப்பிற்கு வந்தால், நாட்டின் நிலைமை என்னவாகும்? என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.
மக்களை ஏமாற்றும் நோக்கில் யாராவது புதிய கட்சி ஆரம்பித்தால், தமிழக மக்கள் அவர்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். திமுக அரசு செய்துள்ள சாதனைகளே வரும் தேர்தல்களில் வெற்றியைத் தேடித்தரும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
