தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம் ,காங்கிரஸ், வி.சி.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடமளித்துத் தமிழ்நாட்டில் புதிய ஆட்சியை அமைத்துள்ளது. த.வெ.க-வின் இந்த அதிகாரப் பகிர்வு மற்ற சிறிய கட்சிகளிடையேயும் ஆட்சியில் பங்கேற்கும் ஆசையைத் தூண்டியுள்ளது.
இதன் எதிரொலியாக, தி.மு.க கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, இனி வரும் காலங்களில் தனிச் சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று அறிவித்துள்ளார்.
அதேபோல், தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தாங்கள் அமைச்சர் பதவிக்காக ஓடும் கட்சி அல்ல என்றும், நினைத்திருந்தால் தங்களுக்குத் துணை முதலமைச்சர் பதவியே தேடி வந்திருக்கும் என்றும் கூறியுள்ளார்.
மறுபுறம், தி.மு.க கூட்டணியில் 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 2 இடங்களில் வெற்றி பெற்ற ம.தி.மு.க, த.வெ.க அரசுக்கு ஆதரவளிக்க முடியாமல் போன கவலையில் உள்ளது. “துரதிர்ஷ்டவசமாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு விட்டோம்” என்று துரை வைகோ கூறியதும், தி.மு.க தங்களைக் குறைந்த இடங்களில் போட்டியிட நிர்பந்தித்ததாக வைகோ குற்றம் சாட்டியதும் அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது.
தி.மு.க கூட்டணியில் நீடிப்பதா இல்லையா என்பது குறித்து ம.தி.மு.க பொதுக்குழுவில் முடிவெடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் கடும் அதிர்ச்சியடைந்த தி.மு.க-வினர், தங்களின் உழைப்பால்தான் ம.தி.மு.க வெற்றி பெற்றது என்றும், உதயசூரியன் சின்னத்தில் நின்றதால்தான் அவர்கள் முகவரியோடு இருக்கிறார்கள் என்றும் கூறி துரை வைகோவின் நன்றியற்ற பேச்சுக்குக் கடுமையான கண்டனங்களையும் வேதனையையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
