தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளார். அவர் பதவியேற்றபோது, த.வெ.க ஆட்சிக்கு 6 மாத காலம் எந்தத் தொந்தரவும் கொடுக்க மாட்டோம் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
ஆனால், த.வெ.க ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றன. அண்மையில் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவில் பேசிய முதலமைச்சர் விஜய், “6 மாதம் அவகாசம் தருவதாகச் சொன்னவர்களால் 6 நாட்கூடப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை; ஆட்சி அமைத்த அரை மணி நேரத்திலேயே விமர்சிக்கத் தொடங்கிவிட்டார்கள்” என்று தி.மு.க-வைச் சாடிப் பேசினார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தி.மு.க முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் எம்.எல்.ஏ-வுமான அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். தவறு நடக்கும் போது அதைச் சுட்டிக்காட்டுவது எதிர்க்கட்சியான தி.மு.க-வின் கடமை என்று குறிப்பிட்ட அவர், “இந்த ஆட்சியே இன்னும் 6 மாதம் நீடிக்குமா என்ற கேள்வி எழும்போது, 6 மாதம் கழித்துக் கேள்வி கேட்பது எப்படிச் சாத்தியம்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், போதைப்பொருள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களால்தான் தி.மு.க ஆட்சி வீழ்ந்தது என்று விஜய் கூறுவதைச் சுட்டிக்காட்டிய அனிதா ராதாகிருஷ்ணன், தற்போதைய த.வெ.க ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் கள்ள லாட்டரி சீட்டு விற்பனையும் அதிகரித்து வருவதாகவும், இதனால் தமிழ்நாடே பாழாகிவிடுமோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளதாகவும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
