திமுக-தேமுதிக கூட்டணி குறித்து பாஜக நிர்வாகி குஷ்பு வெளியிட்டுள்ள கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் அனலைக் கிளப்பியுள்ளன. மறைந்த தலைவர் விஜயகாந்த் தனது வாழ்நாளில் ஒருபோதும் அண்ணா அறிவாலயத்தின் வாசலை மிதிக்காதவர் என்று குறிப்பிட்ட குஷ்பு, தற்போது வேறு வழியில்லாமல் பிரேமலதா எடுத்துள்ள இந்த முடிவை விஜயகாந்தின் ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது என்று கடுமையாகச் சாடியுள்ளார். திமுக இந்த முறை தேர்தலில் தோற்கப்போவது உறுதி என்று தெரிந்தே, யாரையாவது சேர்த்துக்கொண்டு கரையேற முயற்சிப்பதாக அவர் விமர்சித்தார்.
குறிப்பாக, காங்கிரஸ் கூட்டணி வெளியேறிவிடுமோ என்ற அச்சத்திலேயே தேமுதிக-வை திமுக இழுத்துள்ளதாகக் கூறிய அவர், காங்கிரசுக்கு “சூடு, சொரணை, மானம்” இருந்தால் எப்போதோ கூட்டணியை விட்டு வெளியேறியிருக்க வேண்டும் என்று காரசாரமாகப் பேசினார். காமராஜர் காலத்திற்குப் பிறகு காங்கிரஸ் வளர்ச்சி குன்றிவிட்டதாகவும், வரும் தேர்தலில் அதிமுக-பாஜக அலையில் சிக்கி திமுக கூட்டணி காணாமல் போகும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
