நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த மதிமுக, 4 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 2 இடங்களில் வெற்றி பெற்றது. தேர்தலுக்குப் பிறகு திமுக கூட்டணியில் இருந்த சில கட்சிகள் விலகி, தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு அளித்து அமைச்சரவையிலும் இடம்பிடித்துள்ளன. ஆனால், மதிமுக மட்டும் இதுவரை திமுக கூட்டணியிலேயே நீடித்து வருகிறது.
இருப்பினும், திமுகவுக்கு எதிரான கருத்துகளை மதிமுக தலைவர்கள் அவ்வப்போது பொதுவெளியில் கூறி வரும் நிலையில், தற்போது மதிமுக அவைத்தலைவர் அர்ஜுன்ராஜ் திமுகவை ‘நச்சுப்பாம்பு’ என மிகக் காரசாரமாக விமர்சித்துள்ளது தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவைத்தலைவர் அர்ஜுன்ராஜ், “பாம்புக்கு பால் வார்த்தாலும் அது நஞ்சைத்தான் கக்கும்; அதுபோல திமுக ஒரு நச்சுப்பாம்பு” என்று சாடினார். மேலும், திமுகவினர் தில்லுமுல்லுகளுக்குச் சொந்தக்காரர்கள் என்றும், அவர்களுடன் மதிமுக தொடர்ந்து கூட்டணியில் இருக்கக்கூடாது என்பதே கட்சியின் பெரும்பான்மையான கருத்து என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் நல்லது செய்வது போலவே நடித்து மதிமுகவை அழிக்க திமுக நினைப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், தமிழக வெற்றிக் கழகத்துடன் மதிமுக அதிகாரப்பூர்வமாகக் கூட்டணி அமைக்கும் வரை, தவெகவின் நகர்வுகளைத் தூரத்தில் இருந்து ரசித்து வருவோம் என்றும் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் திமுக-மதிமுக கூட்டணியில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளதாகக் கருதப்படுகிறது.
