தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கை எதுவாக இருந்தாலும், அக்கட்சியை ‘டார்ச் லைட்’ சின்னத்திலேயே போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு மற்றும் சின்னம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில், கூட்டணி கட்சிகளின் தனித்துவத்தை மதிப்பது குறித்து திருமாவளவன் தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
“கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் (மநீம) கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் எத்தனை என்பது முக்கியமல்ல. ஆனால், அக்கட்சியை அவர்களின் சொந்தச் சின்னமான ‘டார்ச் லைட்’ சின்னத்திலேயே போட்டியிட அனுமதிப்பதன் மூலம், திமுக தலைமை கூட்டணி மீதான நன்மதிப்பை மேலும் உயர்த்திக்கொள்ள வேண்டும்.
மேலும், “அவ்வாறு தனிச் சின்னத்தில் போட்டியிட அனுமதிக்கும்போதுதான், ‘வெல்வோம் ஒன்றாக’ என்கிற உன்னதம் வாய்ந்த சகோதரத்துவ முழக்கம் அதன் முழுமையான அர்த்தத்தைப் பெறும். இது கூட்டணியின் ஒற்றுமையையும், ஜனநாயகத் தன்மையையும் பொதுமக்களிடையே பறைசாற்றும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த காலங்களில் சிறிய கட்சிகள் பெரிய கட்சிகளின் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற அழுத்தம் கொடுக்கப்பட்ட நிலையில், திருமாவளவனின் இந்த வெளிப்படையான கோரிக்கை அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மக்கள் நீதி மய்யத்தின் தனித்துவத்தை அங்கீகரிப்பது கூட்டணியின் வெற்றிக்கு வலுசேர்க்கும் என்பதே விசிக-வின் கருத்தாக உள்ளது.
