அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்த மாபெரும் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டது தங்களுக்குப் பெருமகிழ்ச்சி அளிப்பதாகவும், அதிமுக தலைமையிலான இந்தக் கூட்டணியின் எழுச்சியைக் கண்டு முதலமைச்சர் ஸ்டாலின் பயந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

திமுக ஆட்சி என்பது ஒரு ‘பூஜ்ஜியம் ஆட்சி’ என்றும், எதற்கும் உதவாத ‘ஓடாத ஓட்டை இன்ஜின் ஆட்சி’ என்றும் அவர் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசிடம் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து நிதியைப் பெறத் தெரியாத ஒரு ‘பொம்மை முதலமைச்சராக’ ஸ்டாலின் இருக்கிறார் என எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.

மதுரை மற்றும் கோவை மெட்ரோ திட்டங்கள் குறித்துப் பேசும் திமுக அரசு, அதற்கான முறையான அறிக்கைகளை மத்திய அரசிடம் வழங்கவில்லை என்றும், வெறும் காற்றில் கம்பு சுற்றும் வேலையை மட்டுமே செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

39 எம்.பி-க்களைக் கையில் வைத்திருந்தும் தமிழக மக்களுக்கு திமுக எதையும் செய்யவில்லை என்பதுதான் உண்மை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குடும்ப ஆட்சி மற்றும் ஊழல் ஆட்சியை வீழ்த்த மக்கள் தயாராகிவிட்டனர் என்றும், மக்களின் எண்ணத்தை நிறைவேற்றவே அதிமுக தலைமையில் இந்த வெற்றிக் கூட்டணி அமைந்துள்ளதாகவும் அவர் உறுதிபடக் கூறியுள்ளார்.

இது வெறும் தொடக்கம் தான் என்றும், வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அரசு அமையும் போது தமிழகத்தின் தேவைகள் அனைத்தும் மத்திய அரசிடம் இருந்து உரிமையோடு பெற்றுத் தரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். “நாளை நமதே” என்ற நம்பிக்கையுடன் தனது தொண்டர்களை அயராது உழைக்க அவர் அறிவுறுத்தியுள்ளார்.