தமிழக சட்டப்பேரவையில் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்திற்கு, தமிழக வெற்றிக் கழக (தவெக) எம்.எல்.ஏ. வி.எம்.எஸ். முஸ்தபா ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தச் சூழலில், திமுக மற்றும் தவெக ஆகிய இரண்டு கட்சிகளையும் மிகக் கடுமையாகச் சாடி பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், “திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலினின் கருத்திற்கு தவெக எம்.எல்.ஏ. முஸ்தபா ஆதரவு தெரிவிப்பது துரதிர்ஷ்டவசமானது. அர்த்தமுள்ள வாழ்வை வழங்கக்கூடிய நித்திய தர்மமான சனாதனத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள தீராத வெறுப்பையே இது காட்டுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
“திமுக மற்றும் தவெக ஆகிய இரு கட்சிகளும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை மக்கள் முன்னிலையில் நிரூபித்துவிட்டன. சனாதன தர்மத்தை இடைவிடாது தாக்குவதால் திமுக இன்று எந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள். விரைவில் தவெக-வும் அதனை உணரும் என எச்சரித்துள்ளார்.
Days after DMK MLA Thiru Udhayanidhi Stalin spoke about eradicating Sanathana Hindu Dharma on the floor of the legislative assembly, TVK MLA Thiru VMS Mustafa came in support of Thiru Udhayanidhi Stalin’s remarks. Not only is this very unfortunate but also it shows the level of… pic.twitter.com/1KocUWyEwg
— K.Annamalai (@annamalai_k) May 14, 2026
மேலும் அவர் கூறுகையில், “திமுக அல்லது தவெக ஆகிய கட்சிகளுக்கு உண்மையான தைரியம் இருந்தால், ‘சனாதன தர்மத்தை எதிர்ப்பதுதான் எங்கள் அரசியலின் மையம்’ என்று தேர்தல் பிரசாரத்தின் போதே வெளிப்படையாக அறிவித்திருக்க வேண்டும். ஆனால், அப்போது மதச்சார்பின்மை என்ற முகமூடிக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு நாடகமாடினார்கள். தற்போது மக்களின் வாக்குகளைப் பெற்றுவிட்டு, அதே மக்களின் நம்பிக்கையை ஆணவத்துடன் இழிவுபடுத்துகிறார்கள்.
மேலும் சனாதன தர்மம் என்பது நீங்கள் குத்துச்சண்டை பயிற்சி செய்யும் ‘பஞ்ச் பேக்’ அல்ல. இத்தகைய பொறுப்பற்ற பேச்சுக்களுக்குத் தமிழக மக்கள் நிச்சயம் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என நான் நம்புகிறேன் என்று அண்ணாமலை தனது பதிவில் மிகக் காரசாரமாகக் குறிப்பிட்டுள்ளார்.
