தமிழக சட்டப்பேரவையில் சனாதன தர்மம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துகளும், அதற்கு பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை அளித்துள்ள பதிலடியும் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் சட்டப்பேரவையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், தனது ‘எக்ஸ்’ (X) தளத்தில் அவர் விரிவான விளக்கத்தை அளித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது, திராவிட இயக்கம் எதிர்ப்புகளிலேயே வளர்ந்தது. இத்தகைய விமர்சனங்களுக்கு நான் அஞ்சமாட்டேன்.
சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்பது யாரும் கோயிலுக்குப் போகக்கூடாது என்பதல்ல. மாறாக, கோயில் மற்றும் சமூகம் என அனைத்து இடங்களிலும் அனைவருக்கும் சம உரிமை கிடைக்க வேண்டும் என்பதே அதன் பொருள். மேல் சாதி, கீழ் சாதி என மக்களைப் பிரிப்பதைத்தான் நான் எதிர்க்கிறேன். பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்கள் போதித்த கொள்கையையே நானும் பேசுகிறேன். நாங்கள் யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவர்கள் அல்ல. ஆனால், சமூகத்திலுள்ள சமத்துவமின்மையையும், ஒடுக்குமுறையையும் கடுமையாக எதிர்ப்போம்.
உதயநிதி ஸ்டாலினின் இந்த விளக்கத்தைக் கடுமையாகச் சாடியுள்ள பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பேசிய பழைய வீடியோ ஒன்றைச் சான்றாகக் காட்டிப் பதிவிட்டுள்ளார். அண்ணாமலையின் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது,
“இந்த புளிச்சுப்போன விளக்கத்தை இன்னும் எத்தனை முறை சொல்லப் போகிறீர்கள்? சனாதன தர்மமும், இந்து மதமும் வெவ்வேறானவை அல்ல என்று உங்கள் சித்தாந்த குருவான கி. வீரமணியே தெளிவாகக் கூறுகிறார். நீங்கள் அத்தனை துணிச்சலானவர் என்றால், இதையே தேர்தல் பிரசாரத்தின் போது பேசியிருக்க வேண்டியதுதானே?
இந்த புளிச்சுப் போன விளக்கத்தை இன்னும் எத்தனை முறை சொல்லுவீங்க?
சனாதன தர்மம், ஹிந்து மதம் ரெண்டும் வெவ்வேறு அல்லன்னு உங்க ஓனர் சொல்றாரு. இவர்தானே உங்க குரூப்புக்கு சித்தாந்த குருநாதர்?
தேர்தலுக்கு முன்ன பிரச்சாரத்துக்குப் போன போது, இதே மாதிரி சனாதன ஹிந்து தர்மத்தை ஒழிக்கணும்னு… https://t.co/H7gfxDl6Pe pic.twitter.com/FfbkR6vnbI
— K.Annamalai (@annamalai_k) May 15, 2026
அப்போது ஏன் உங்கள் குருநாதரை (கி. வீரமணி) பிரசார வண்டியில் ஏற்றிக்கொண்டு சென்று இதைக் கூறவில்லை? தேர்தலுக்கு முன்பு ஒரு பேச்சு, இப்போது ஒரு பேச்சா?” என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். சனாதனம் தொடர்பான விவாதம் மீண்டும் சூடுபிடித்துள்ள நிலையில், இந்த வார்த்தைப்போர் சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
