மதிமுக கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த மல்லை சத்யாவை அந்த கட்சியின் தலைவர் வைகோ கட்சியிலிருந்து நீக்கினார். இதனைத் தொடர்ந்து திராவிட வெற்றி கழகம் என்ற புதிய கட்சியினை மல்லை சத்யா ஆரம்பித்த நிலையில் தற்போது தங்கள் கட்சியை பதிவு செய்வதற்கான வேலையில் ஈடுபட்டுள்ளதாக கூறினார். இன்று செய்தியாளர்களை சந்தித்த மல்லை சத்யா தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து தன்னுடைய கருத்தினை கூறினார்.
குறிப்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முன்னிலையில் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் இணைந்தது பற்றி கூறினார். இது பற்றி அவர் பேசியதாவது, நான் திமுக கட்சியில் செங்கோட்டையன் இணைவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அது பொய்த்து போய்விட்டது. அவர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளார். அரசியல் அனுபவம் வாய்ந்த செங்கோட்டையன் அனுபவத்தை தமிழக வெற்றிக்கழகம் பயன்படுத்திக் கொண்டால் அது அந்த கட்சிக்கு மிகவும் நல்லது என்று கூறினார். மேலும் திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகப்போவதாகவும் வைகோ வேறு கூட்டணிக்கு மாற இருப்பதாகவும் ஒரு பரபரப்பு கருத்தினையும் அவர் முன் வைத்தது குறிப்பிடத்தக்கதாகும்.
