கல்விக்கடன் ரத்து மற்றும் இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசியலில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, திமுக தனது தேர்தல் அறிக்கையில் கல்விக்கடன் ரத்து மற்றும் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் போன்ற வாக்குறுதிகளை அளித்திருந்தது. ஆனால், அந்த வாக்குறுதிகள் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டும் விதமாக எடப்பாடி பழனிசாமி இந்த அறிவிப்புகளை வெளியிட்டு திமுக தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளார்.
தற்போது அதிமுக இந்த அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ள நிலையில், திமுகவும் தனது தேர்தல் அறிக்கையில் மீண்டும் இதே வாக்குறுதிகளை அளித்தால் அது மக்களிடையே பெரிய கேள்விகளை எழுப்ப வாய்ப்புள்ளது. “ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளையே இன்னும் ஏன் நிறைவேற்றவில்லை?” என்ற கேள்வி எழும் என்பதால், திமுக இதனை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. எடப்பாடி பழனிசாமியின் இந்த வியூகம் வரும் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு ஒரு பெரிய சவாலாக அமையும் எனக் கருதப்படுகிறது.
