தமிழக வெற்றிக் கழகத்தின் 3-ஆம் ஆண்டு தொடக்க விழா, சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் விஜய் உற்சாகமாக நடனமாடியது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

கட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி பனையூர் அலுவலகத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில் முருகன் பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் த.வெ.க.வின் கொள்கை விளக்கப் பாடல்கள் பாடப்பட்டன.

அப்போது மேடையில் பாடிய பிரபல பின்னணிப் பாடகர் வேல்முருகன், விஜய்யைப் பாராட்டிப் பாடல் ஒன்றைப் பாடினார். அவருக்கு விஜய் சால்வை அணிவித்து கௌரவித்தார். தொடர்ந்து, விஜய்யின் வேண்டுகோளுக்கு இணங்க, “தளபதி.. தளபதி வாழ்க.. நம்ம வெற்றிக்கொடி எப்பவுமே வாழ்க” என்ற பாடலை வேல்முருகன் பாடினார். அந்தப் பாடலின் தாளத்திற்கு ஏற்ப நடிகர் விஜய் மேடையிலேயே உற்சாகமாக நடனமாடினார். இது அங்கிருந்த தொண்டர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது.

கட்சி மேடையில் ஒரு அரசியல் கட்சித் தலைவர் நடனமாடியது விமர்சனங்களையும் சந்தித்துள்ளது. இது குறித்து பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பா.ஜ.க. நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு செய்தியாளர்களைச் சந்தித்தபோது இது குறித்துக் கூறியதாவது, “விஜய் தற்போது ஒரு அரசியல் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தாலும், பொதுமக்களும் ரசிகர்களும் அவரை இன்னும் ஒரு சிறந்த நடிகராகவும், நடனக் கலைஞராகவுமே பார்க்கின்றனர். அதனால் அவர் நடனமாடியதில் வியப்பில்லை. மேலும், விஜய் தனது அரசியல் எதிரியாக தி.மு.க-வை மட்டுமே முன்னிறுத்துகிறார்; அ.தி.மு.க-வை அவர் எதிரியாகக் கருதவில்லை என்பது அவரது பேச்சிலிருந்து தெரிகிறது.”

இவ்வாறு அவர் தெரிவித்தார். தமிழக வெற்றிக் கழகத்தின் இந்த விழா மற்றும் விஜய்யின் அரசியல் நகர்வுகள் தற்போது தமிழக அரசியலில் முக்கிய விவாதமாக மாறியுள்ளன.