தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமியே தலைமை தாங்குவார் என்றும், அவரது தலைமையிலேயே கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசியல் நிலவரம் மற்றும் கூட்டணி குறித்துப் பல்வேறு முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இணைந்திருப்பது குறித்து அவர் பேசுகையில், டி.டி.வி. தினகரன் சரியான நேரத்தில் நல்ல முடிவை எடுத்துள்ளார். அவர் கூட்டணியில் இணைந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் கூட்டணியின் பலம் மேலும் அதிகரிக்கும். அதேபோல், ஓ.பன்னீர்செல்வம் எங்களை விட்டுப் போகமாட்டார்; அவர் தொடர்ந்து எங்களுடனேயே இருந்து செயல்படுவார் என நம்புகிறேன்.”

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுக-விலிருந்து விலகி, விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தது குறித்து நயினார் நாகேந்திரன் தனது வருத்தத்தைப் பதிவு செய்தார்: “முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மிகவும் அவசரப்பட்டு ஒரு முடிவை எடுத்துவிட்டார். தவெக-வில் இணைந்ததன் மூலம் அவர் தவறான பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார். மூத்த அரசியல்வாதியான அவரை நினைத்து வருத்தப்படுகிறேன். தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.”

தமிழக அரசியல் வரலாற்றைச் சுட்டிக்காட்டிப் பேசிய அவர், “திமுக இதுவரை தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்ததே இல்லை. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி எவ்வளவோ முயற்சி செய்தும் அது பலிக்கவில்லை. எனவே, வரும் தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று,” என்று விமர்சித்தார்.

கூட்டணி விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திய அவர், தமிழகத்தில் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை எடப்பாடி பழனிசாமிதான் முன்னின்று நடத்துவார் என்றும், இதில் டெல்லி தலைமை தலையிடாது என்றும் உறுதிபடத் தெரிவித்தார். மேலும் பல கட்சிகள் தங்கள் கூட்டணியில் இணையத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.