தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சென்னியம்பட்டி பகுதியில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்தி பிரியா (20) என்ற மகள் இருந்துள்ளார். இவர் கோவில்பட்டி அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த நிலையில் தினமும் கல்லூரி முடிந்த பிறகு வீட்டிற்கு வரும் இவர் வீட்டில் வேலைகள் செய்யாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதேபோன்று சம்பவ நாளிலும் கார்த்தி பிரியா வீட்டு வேலைகளை செய்யாமல் இருந்துள்ளார்.
இதனால் வீட்டிற்கு வந்து அவரது தந்தை கார்த்தி பிரியாவை திட்டிய நிலையில் அவர் மிகவும் மனமுடைந்தார். இந்நிலையில் பெற்றோர் வெளியே சென்றிருந்த நிலையில் கார்த்தி பிரியா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது கார்த்தி பிரியா திடீரென விஷம் குடித்து மயங்கி கிடந்த நிலையில் வீட்டிற்கு வந்த பெற்றோர் அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் கோவில்பட்டி மருத்துவமனையில் முதலுதவி கொடுக்கப்பட்டு பின்னர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் கார்த்தி பிரியா பரிதாபமாக உயிரிழந்தார். அவர் நேற்று இரவு உயிரிழந்த நிலையில் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
