அதிமுகவில் பிளவுபட்ட அணிகளை ஒன்றிணைக்க வலியுறுத்திய காரணங்களுக்காக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் தகவலை உறுதிப்படுத்தும் வகையில், இன்று (நவ. 25) தவெகவின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜூனா மற்றும் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் செங்கோட்டையனைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.

அதிமுகவில் ‘சூப்பர் சீனியராக’ இருந்த செங்கோட்டையன், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பி.எஸ்., டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரைச் சந்தித்ததால் எடப்பாடி பழனிசாமியின் அதிருப்திக்கு ஆளானார். இந்தச் சூழலில், தற்போது தவெகவின் முக்கியஸ்தர்களுடன் அவர் சந்திப்பு நடத்தியிருப்பது, அவரது அரசியல் எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.
மேலும், ஓரிரு நாட்களில் செங்கோட்டையன், தவெக தலைவர் விஜய்யுடன் நேரடியாகப் பேசிய பிறகு கட்சியில் இணைவது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
