மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில், திருமணமான முதல் நாளே மணமகள் தப்பிச் செல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விசாரணையில், மணமகள் திருமண மோசடியில் ஈடுபடும் கும்பலைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. பீட் மாவட்டம் அம்பாஜோகை தாலுகா கோட்ரி கிராமத்தைச் சேர்ந்த நாகேஷ் ஜக்தாப் (36) என்பவருக்கு சமீபத்தில் திருமண தரகர் ஒருவர் மூலம் பிரித்தி ராவத் என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. பெண் தேடி கொடுத்ததற்காக தரகர் ரூ.1.90 லட்சம் கமிஷனாக பெற்றதாக கூறப்படுகிறது. பெண் வீட்டாரிடம் இருந்து வரதட்சணை எதுவும் பெறப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, காய்ஜ் தாலுகாவில் உள்ள கோவிலில் மதியம் 12.30 மணிக்கு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. பின்னர் மணமகள் மணமகன் வீட்டான கோட்ரிக்குக் கொண்டு வரப்பட்டார். மாலை 4.30 மணியளவில், பிரித்தி ராவத் கழிவறைக்கு செல்கிறேன் என்று கூறி வெளியே சென்ற அவர், பின்னர் திரும்பி வரவில்லை. இதே நேரத்தில், மணக்கோலத்தில் தனியாக நடந்து சென்ற அவரை பார்த்த கிராம மக்கள், சந்தேகமடைந்து தகவலை மணமகன் வீட்டாரிடம் தெரிவித்தனர்.

மணமகன் குடும்பத்தினர் தேடி சென்று திக்கோல் அம்பா பஸ் நிறுத்தத்தில் அவரை பிடித்தனர். அப்போது அவர் வீட்டை விட்டு வெளியே வந்தது தொடர்பாக முரண்பட்ட விளக்கங்களை அளித்ததால், போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், பிரித்தி ராவத் திருமண மோசடி கும்பலுடன் தொடர்புடையவர் என்பது உறுதியானது. பணத்துக்காக திருமணத்துக்கு சம்மதித்து, சில மணி நேரத்திலேயே தப்பிச் செல்ல முயன்றதும் விசாரணையில் வெளியாகியுள்ளது. மேலும் இந்த மோசடியில் திருமண தரகர் மற்றும் மணமகளின் அத்தைக்கும் தொடர்பு உள்ளதாக தெரியவந்தது. மேலும் சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.