உத்தரப் பிரதேசத்தின் பாராபங்கி மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கிய ஒரு கிளினிக்கில், 38 வயதுள்ள தலித் பெண் முனிஷ்ரா ராவத், பித்தப்பை கல் அறுவை சிகிச்சையின்போது உயிரிழந்தார். போலி மருத்துவர்களான சித்தப்பா-மருமகன் இருவரும் யூடியூப் காணொளியைப் பார்த்துவிட்டு, போதையில் இந்த அறுவை சிகிச்சையைச் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிகிச்சைக்குப் பிறகு பெண்ணின் உடல்நிலை மோசமடைந்து அவர் இறந்தவுடன், இருவரும் கிளினிக்கைப் பூட்டிவிட்டு ஓடிவிட்டனர்.
இறந்தவரின் கணவர் ஃபதேபகதூர் ராவத் அளித்த புகாரின் அடிப்படையில், கிளினிக் உரிமையாளர் ஞான பிரகாஷ் மிஸ்ரா மற்றும் அவரது மருமகன் விவேக் மிஸ்ரா ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவேக் மிஸ்ரா, அரசு ஆயுர்வேத மருத்துவமனை ஒன்றில் அரசு ஊழியராகப் பணிபுரிபவர் என்றும், அவரது மறைமுகப் பின்னணியில் இந்தக் கிளினிக் பல ஆண்டுகளாகச் சட்டவிரோதமாக இயங்கி வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, அந்தக் கிளினிக்கிற்கு சுகாதாரத் துறையினர் நோட்டீஸ் ஒட்டி, மூன்று நாட்களுக்குள் பதிவு தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பிக்கக் கோரியுள்ளனர். தவறினால், கிளினிக்கிற்கு நிரந்தரமாகச் சீல் வைக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.
