
சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் பாலா நகர் 27-வது அவன்யூ பகுதியில் அப்துல் ரகுமான் என்பவர் வசித்து வருகிறார். இவர் அம்பத்தூர் செங்குன்றம் சாலையில் வாகனங்களுக்கு தேவையான பேட்டரி விற்பனை செய்யும் புதிய கடையை நேற்று திறக்கவிருந்தார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் அலங்காரம் செய்யும் பணியில் அப்துல் ரகுமானும், அவரது மகன் முகமது சுகையிலும்(17) ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அவர்களுடன் நண்பர்களான கண்ணதாசன், சந்தோஷ் குமார் ஆகியோரும் இருந்தனர். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் நான்கு பேரும் வீட்டிற்கு புறப்பட தயாரானார்கள். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் தாறுமாறாக ஓடி முகமது சுகைல், கண்ணதாசன் ஆகியோர் மீது பயங்கரமாக மோதியது. மேலும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ, இருசக்கர வாகனம் மீது மோதி நிற்காமல் பின் மின்கம்பத்தில் மோதி நின்றது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த முகமது சுகைல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கண்ணதாசனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்க அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஜார்ஜ் மில்லர் என்பவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.