தமிழகத்தில் போதைப்பழக்கத்தை வேரோடு ஒழிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குற்றங்களின் பிறப்பிடமாக விளங்கும் போதைப்பழக்கத்தைக் கட்டுப்படுத்த கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1,638 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்குப் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு சிறையிலடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். பள்ளிகள் அருகே இருந்த மதுபானக் கடைகள் அகற்றப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், ‘போதையில்லா தமிழ்நாடு’ என்பதே தங்களின் முதன்மை இலக்கு என்றார்.

மேலும், பிரதமருடனான சந்திப்பில் மேகதாது அணை குறித்து முதல்வர் விஜய் பேசவில்லை என்ற ஆர்.பி.உதயகுமாரின் விமர்சனத்திற்குப் பதிலளித்த அமைச்சர், அவருக்கு அரசியல் தெரிவது போல அறிவியலும் தெரிய வேண்டும் என்றும், அதிமுக ஆட்சிக்காலத்தில் உரிய அழுத்தத்தைக் கொடுத்திருந்தால் மக்கள் அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளித்திருப்பார்கள் என்றும் விமர்சித்தார்.தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதா என்ற சமூக வலைதள வதந்திகளுக்கு அமைச்சர் ராஜ்மோகன் முற்றுப்புள்ளி வைத்தார்.

இதுகுறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், இதுபோன்ற செய்திகள் அனைத்தும் திமுகவின் ஐடி விங்கால் திட்டமிட்டுத் திரைக்கதை எழுதப்படும் வதந்திகள் என்று சாடினார். தவெகவின் தலைமை என்பது மக்களும், தலைவர் விஜயும் மட்டும்தான் என்று குறிப்பிட்ட அவர், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஒரு ஆற்றல்மிக்க அமைச்சர் என்றும், அவரது நற்பெயரைக் கெடுத்துச் சிறுமைப்படுத்துவதற்காகவே இத்தகைய வதந்திகள் வேண்டுமென்றே பரப்பப்பட்டு வருவதாகவும் தனது விளக்கத்தில் தெளிவுபடுத்தினார்.