தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சி குறித்து காங்கிரஸ் நிர்வாகி பிரவீண் சக்கரவர்த்தி வெளியிட்ட கருத்துக்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், தமிழக வெற்றிக் கழகம் வரும் தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டாலும் 18 சதவீத வாக்குகளைப் பெறும் என அவர் கணித்துள்ளார். மக்கள் விஜய்யை ஒரு அரசியல் தலைவராக முழுமையாக அங்கீகரித்துள்ளதை தனது ஆய்வுகள் உறுதிப்படுத்துவதாகவும், தவெக-வின் வளர்ச்சி என்பது அனைவரும் அறிந்த உண்மை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு பிரவீண் சக்கரவர்த்தி மற்றும் விஜய் இடையே நடைபெற்ற சந்திப்பு ஏற்கனவே அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக இருந்தது. அதனைத் தொடர்ந்து, தவெக தரப்பிலிருந்து காங்கிரஸைக் கூட்டணிக்கு அழைக்கும் விதமாகப் பேச்சுக்கள் எழுந்தன. தற்போது காங்கிரஸ் தரப்பிலிருந்தே விஜய்யின் வாக்கு வங்கி குறித்த சாதகமான கருத்துக்கள் வெளியாகியுள்ளன. இது வரும் சட்டமன்றத் தேர்தலில் புதிய அரசியல் கூட்டணிகளுக்கோ அல்லது பலப்பரீட்சைகளுக்கோ அடித்தளமாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
