தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு க ஸ்டாலின் திமுக தேர்தல் அறிக்கை மற்றும் வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டார். அதில் மதுரை மாவட்டத்தின் வளர்ச்சியை முன்னேற்றும் விதமாக ஐந்து முக்கிய திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது மதுரையில் ஐஐடி அமைக்கப்படும். திருவாரூர் மற்றும் திருப்பதிக்கு மதுரையிலிருந்து ரயில் இயக்கப்படும். மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்படும். மதுரை விமான நிலையம்  விரிவாக்கம் செய்யப்படும்.

திருச்சி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் இடையே மின்சார ரயில் சேவை அமைக்கப்படும். இதில் மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்படும் என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டமாக இருந்தாலும் தற்போது நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையில் மீண்டும் இடம் பெற்றுள்ளதால் இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை பல திட்டங்கள் மதுரையை ஏமாற்றி இருப்பதால் தற்போது வெளியிடப்பட்டுள்ள திமுக தேர்தல் அறிக்கை மதுரை மக்களுக்கு சற்று ஆறுதல் கொடுத்துள்ளது.