தஞ்சாவூரில் கட்சித் தலைமையின் அனுமதியின்றி தன்னிச்சையாக வேட்புமனு தாக்கல் செய்த பாஜக நிர்வாகி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாஜக தனது அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலை வெளியிடும் முன்பே, தஞ்சை தெற்கு மாவட்ட பாஜக துணைத் தலைவராக இருந்த முரளிதரன் என்பவர் வேட்புமனுத் தாக்கல் செய்தது கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் கூட்டணிக் பேச்சுவார்த்தைகள் மற்றும் வேட்பாளர் தேர்வு இறுதிக்கட்டத்தில் இருக்கும் சூழலில், இவரது இந்தத் தன்னிச்சையான முடிவு கட்சிக்கு தர்மசங்கடத்தை உருவாக்கியுள்ளது. இந்த ஒழுங்கீன நடவடிக்கை குறித்து பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதற்காக முரளிதரன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதனால் கட்சி விதிகளை மீறி செயல்பட்டது மற்றும் மேலிட உத்தரவை மதிக்காமல் தன்னிச்சையாக வேட்புமனு தாக்கல் செய்த காரணத்திற்காக, அவர் வகித்து வந்த கட்சிப் பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து உடனடியாக நீக்கப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் உட்கட்சி ஒழுக்கத்தை நிலைநாட்டும் வகையில் பாஜக தலைமை எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
