2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான பி. தனபால், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கொண்டுள்ள அதிருப்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியைத் தக்கவைக்க இக்கட்டான சூழல்களில் உறுதுணையாக இருந்த தனக்கு, இந்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் தனபால் கடும் மனவேதனையில் இருப்பதாகத் தெரிகிறது.

இந்தத் தேர்தல் புறக்கணிப்பைத் தொடர்ந்து, தனது சமூக வலைதளப்பக்கத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து அவர் பகிர்ந்துள்ள உருக்கமான பதிவு, அதிமுக தலைமைக்கு மறைமுகமாக விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தனபால், கடந்த 1988-ம் ஆண்டு தனக்கு ஏற்பட்ட ஒரு சாலை விபத்தை நினைவுகூர்ந்துள்ளார்.

அந்த இக்கட்டான நேரத்தில் ஜெயலலிதா நேரில் வந்து தன்னை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நெகிழ்ச்சியான சம்பவத்தைப் பதிவிட்டுள்ள அவர், “அம்மாவின் அன்பு எத்தகையது என்பது எனக்குத் தெரியும்” என உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் எடப்பாடி பழனிசாமி அணியில் தனக்கான முக்கியத்துவம் குறைந்திருப்பதைச் சுட்டிக்காட்டும் விதமாகவே, ஜெயலலிதாவின் கருணைமிக்க தலைமையையும் அவரது அரவணைப்பையும் தனபால் தற்போது முன்னிலைப்படுத்தி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இது வரும் தேர்தலில் அதிமுகவின் வெற்றி வாய்ப்புகளில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வி எழுந்துள்ளது.