திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.
‘உடன்பிறப்பின் குரல்’ (udanpirapinkural.in) என்ற இணையதளம் வழியாக இதுவரை 4.60 லட்சம் கருத்துகள் பெறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கட்சித் தொண்டர்கள் அனைவரும் எந்தவிதத் தயக்கமும் இன்றி தங்களின் மனதில் தோன்றும் கருத்துகளையும் ஆலோசனைகளையும் இந்த இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும், அவை நேரடியாகத் தமக்கே வந்து சேரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் நிர்வாகிகள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் வழங்கும் அனைத்து ஆலோசனைகளையும் விரிவாக ஆராய்ந்தே திமுகவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் திட்டமிடப்படும் என்பதால், அனைவரும் வரும் மே மாதம் 31-ம் தேதிக்குள் தங்களின் கருத்துகளைப் பதிவு செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், இந்தத் தகவல் அனைத்துத் தொண்டர்களுக்கும் சென்றடையும் வகையில் கட்சியின் மாநிலப் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அனைவரும் இதனைத் தங்களின் சமூக வலைதளப் பக்கங்களிலும் வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
