பெருநகரச் சாலைகளில் லம்போர்கினி போன்ற விலையுயர்ந்த சொகுசு கார்களைக் காண்பது அரிதான ஒன்று. அத்தகைய கார்களைக் காணும்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வியப்புடன் பார்ப்பது வழக்கம். அந்த வகையில், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், தனது தாயுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற சிறுவன் ஒருவன், அருகில் சென்ற லம்போர்கினி காரை மிகுந்த ஆர்வத்துடன் பார்த்துள்ளான். இதனை கவனித்த அந்த காரின் உரிமையாளரும், ‘செராமிக் ப்ரோ இந்தியா’ (Ceramic Pro India) நிறுவனத்தின் நிறுவனருமான நிஷாந்த் சாபு, அந்த சிறுவனின் தூய்மையான மகிழ்ச்சியைக் கண்டு நெகிழ்ந்து, அவனுடன் பேச தனது காரை நிறுத்தியுள்ளார்.
அந்தச் சிறுவன் தனது தாயிடம் காரை நிறுத்துமாறு கூறி, அந்த சொகுசு காருடன் ஒரு புகைப்படம் எடுக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளான். உடனடியாக காரை ஓரமாக நிறுத்திய நிஷாந்த் சாபு, அந்த சிறுவனிடம் காரில் ஒரு பயணம் (Ride) செல்ல விருப்பமா என்று அன்புடன் கேட்டுள்ளார். ஆனால், அந்தச் சிறுவனோ பயணம் செய்ய வேண்டாம் என்றும், காரில் அமர்ந்து ஒரு புகைப்படம் மட்டும் எடுத்துக்கொண்டால் போதும் என்றும் மிகவும் எளிமையாகப் பதிலளித்துள்ளான். அந்தச் சிறுவனின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு, நிஷாந்த் அவனை காரினுள் அமர வைத்து புகைப்படம் எடுக்க அனுமதித்தார். இந்த வீடியோவை நிஷாந்த் சாபு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், “பணம் இருப்பவர்கள் பலருண்டு, ஆனால் இத்தகைய பரந்த உள்ளம் சிலருக்கே இருக்கும்” என இணையவாசிகள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
