ஆரம்பத்தில் தம்பி விஜய் அரசியலுக்கு வருவதை இருகரம் கூப்பி வரவேற்ற சீமான், தற்போது அவர் மீது கடும் அதிருப்தியில் இருப்பது அவரது பேச்சிலேயே அப்பட்டமாகத் தெரிகிறது. குறிப்பாக, விஜய் தனது கட்சிக் கொள்கையில் திராவிடத்தையும் கையில் எடுத்தது சீமானுக்குப் பிடிக்கவில்லை. இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், விஜய்க்கு அவர் கேட்ட ‘விசில்’ சின்னம் கிடைத்ததற்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தாலும், தேர்தல் ஆணையம் தனக்கு மட்டும் ஒரு நியாயத்தையும், மற்றவர்களுக்கு ஒரு நியாயத்தையும் கடைப்பிடிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
“எனக்குக் கேட்ட சின்னத்தைக் கொடுக்க மாட்டார்கள், அப்படியே கொடுத்தாலும் மாற்றி விடுவார்கள்” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய அவர், மற்ற கட்சிகள் எதையும் தனக்கு ஒரு போட்டியாகவே கருதவில்லை என்றும், பணத்தை நம்பி அரசியல் நடத்துவோரிடையே தான் போட்டி என்றும் சாடினார். மேலும், இலவசத் திட்டங்கள் குறித்துப் பேசிய சீமான், “ஒருவர் பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம் என்கிறார், இன்னொருவர் ஆண்களுக்கும் என்கிறார்.. நாடு எங்கே போய் முடியுமோ?” என எள்ளலாகக் கேள்வி எழுப்பினார்.
கோயம்பேடு பேருந்து நிலையமே தமக்கு போதுமானது என்றும், கிளாம்பாக்கம் போன்ற புதிய திட்டங்கள் அவசியமற்றது என்பது போலவும் தனது கருத்தைப் பதிவு செய்தார். ஒருவருக்குக் கொள்கை என்றால் என்னவென்றே தெரியவில்லை என விஜயை மறைமுகமாகத் தாக்கிப் பேசிய சீமானின் இந்த நேர்காணல், ‘அணில் குஞ்சுகள்’ என அவர் ரசிகர்களை விமர்சித்த பழைய சர்ச்சையை மீண்டும் கிளப்பியுள்ளது. 2026 தேர்தல் களம் இப்போது இருந்தே அனல் பறக்கத் தொடங்கிவிட்டது என்பது மட்டும் உறுதி!
